சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து பேசியபோது எடுத்த படம்.
1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு விளாத்திகுளம் தொகுதி பசுமையான பகுதியாக மாற்றப்படும் -மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு
- முத்துலாபுரம் வைப்பாற்று கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.
- சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை இன்றி குடிநீர் கிடைக்கும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் வைப்பாறு மற்றும் ஆற்றுக்குள் அடர்ந்து வளர்ந்து இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
இதில் 2-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் கிழக்குப் பகுதியில் இப்பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று 3-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து நென்மேனி வரையிலான ஆறு மற்றும் கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.
இதற்கான தொடக்க விழாவில் மரங்கள் மக்கள் இயக்கம் இணை நிறுவனர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.நீர்வளத்துறை வைப்பாா் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஸ்ரீராம், நீர்வளத்துறை வைப்பார் வடிநிலப்பிரிவு விளாத்திகுளம் உதவி பொறியாளர் நிவேதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் எம்.பி கனிமொழி தலைமையில் விரைவில் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் 25 லட்சம் பனை மர விதைகள் நடப்படும். விளாத்திகுளம் கண்மாயில் உள்ள 550 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது.
இதே போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கண்மாய்களில் இருக்கின்ற சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை இன்றி குடிநீர் கிடைக்கும். ஒரு கோடி மரக்கன்று என்ற இலக்கை விரைவில் அடங்கி நாட்டிலேயே பசுமையான பகுதியாக விளாத்திகுளம் தொகுதி மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சிவபாலன், தங்கவேல், செல்வகுமார், டி.எஸ்.பி. பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், மும்மூர்த்தி காசிவிஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மரங்கள் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், மார்த்தாண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்கரும்புளி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.