உள்ளூர் செய்திகள்

சாம்சங் நிறுவனத்தில் மேலும் 13 பேர் சஸ்பெண்டு

Published On 2025-02-21 10:29 IST   |   Update On 2025-02-21 10:29:00 IST
  • 16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்.
  • தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

தொடர்ந்து சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த ஜனவரி 4 -ந்தேதி பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சாம்சங் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்திய நிலையில் 13 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்டு செய்யப்பட்ட 13 ஊழியர்களும் சிஐடியூ-வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News