உள்ளூர் செய்திகள்

மாஞ்சோலையில் மின்வாரிய அலுவலகம் அருகே சுற்றித்திரிந்த 18 அடி நீள ராஜநாகம்

Published On 2025-02-09 10:49 IST   |   Update On 2025-02-09 10:49:00 IST
  • பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல.
  • கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தற்போது பணிகள் எதுவும் நடக்காததால் யானை, சிறுத்தை, ராஜநாகம் என அனைத்து வன விலங்குகளும் சுதந்திரமாக வந்து செல்கிறது.

இந்நிலையில் மாஞ்சோலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் அருகே ராஜநாகம் ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து பரப்பி உள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. சுமார் 18 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் எவ்விதமான பரபரப்பும் இன்றி சாதாரணமாக நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

இதுகுறித்து மாஞ்சோலை மற்றும் காணி பழங்குடியின மக்கள் கூறுகையில், எங்கள் மக்கள் ராஜநாகத்தை 'கருஞ்சாத்தி' என்று அழைக்கின்றனர். இவைகளின் கூட்டை பல முறை பார்த்துள்ளோம். பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல. இது மிக இறுக்கமாக இருக்கும். காட்டுத் தீ ஏற்பட்டால் கூட அதைத் தாங்கும் வலிமையில் அந்தக் கூடு வேயப்பட்டிருக்கும். அவை கண் இமைக்கும் நேரத்தில் நம்மை நோக்கி சீறிப் பாய்ந்து விரட்டும். கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது. மற்ற காலங்களில் மிக சாதுவாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News