செய்திகள்

கவுரவக் கொலைகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்கக்கோரி பொதுநல வழக்கு: பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-06-07 08:05 IST   |   Update On 2016-06-07 08:05:00 IST
கவுரவக் கொலைகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்கக்கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

இந்திய மக்கள் மன்றத்தின் தலைவராக இருப்பவர் வாராகி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் இந்த கட்சிகள் கவுரவக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்த விருத்தாச்சலம் முருகேசன்- கண்ணகி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அதன்பின்னர், தூத்துக்குடி வினோத்குமார், சேலம் இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி- பழனியப்பன் என்று ஏராளமானோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட உடுமலைப்பேட்டை சங்கரை ஒரு கும்பல் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் கலப்பு திருமணம் செய்துக்கொண்ட 81 பேர் இறந்துள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த கவுரவக்கொலைகளைத் தடுக்க, சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு பிறப்பித்துள்ளது. அதில், கவுரவக்கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும்தான் பொறுப்பேற்கவேண்டும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கலாம் என்று கூறியுள்ளது.

எனவே தமிழகத்தில் நடைபெறும் கவுரவக்கொலைகளை தடுக்க புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் முதல்-அமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உத்தரவிடவேண்டும். வன்கொடுமை அதிகமாக உள்ள இடங்களில் வசிக்கும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மனுதாரர் வக்கீல், ‘வன்கொடுமை சட்டத்தில் உள்ள விதிகள் இந்த உரிமையை வழங்குகிறது‘ என்று கூறி அந்த சட்டப்பிரிவை வாசித்து காட்டினார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு தமிழக தலைமை செயலாளர், தேசிய எஸ்.சி மற்றும் எஸ்.டி. ஆணையத்தின் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Similar News