செய்திகள்

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் மனைவி ராணுவத்தில் சேருகிறார்

Published On 2016-06-07 09:22 IST   |   Update On 2016-06-07 09:22:00 IST
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் மனைவி ராணுவத்தில் சேருகிறார். அவர் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சேர தேர்ச்சி பெற்றார்.
சென்னை

மராட்டிய மாநிலம் சதாரா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் யஷ்வந்த் மகாதிக் (வயது 38). இவர், இந்திய ராணுவத்தில் 41-வது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படைப்பிரிவில் கர்னலாக பணியாற்றி வந்தார்.



கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி, காஷ்மீரில் குப்வாரா பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ஊடுருவியவர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் மகாதிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரது சேவையை பாராட்டி, இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, அவருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.

அவரது உடல், அவரது சொந்த கிராமத்தில், முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அவருடைய மனைவி சுவாதி (32), தன் கணவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்ற ராணுவத்தில் சேரப்போவதாக அறிவித்தார். அவருக்கு அவருடைய குடும்பத்தினரும் ஆதரவு அளித்தனர்.

இந்த தம்பதியருக்கு கார்த்திகி (12) என்ற மகளும், சுவராஜ்யா (6) என்ற மகனும் உள்ளனர். அவர்களையும் குடும்பத்தினர் கவனித்துக்கொண்டனர்.

சமூக பணியில் முதுகலை பட்டம் படித்து, ஆசிரியர் பயிற்சியும் பெற்றுள்ள சுவாதி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அவர் ராணுவத்தில் சேருவதற்காக, புனேவுக்கு சென்று தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ராணுவத்தில் சேர்வதற்கான ஆயுதப்படை தேர்வு வாரிய தேர்வு எழுதுவதற்கு சுவாதிக்கு வயது வரம்பு முடிவடைந்து இருந்தது.

இருப்பினும், ராணுவ தளபதி தல்பிர் சிங் சிபாரிசின் பேரில், ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், சுவாதிக்காக வயது வரம்பு விதிமுறையை தளர்த்தி, தேர்வு எழுத அனுமதி அளித்தார்.

ஆயுதப்படை தேர்வு வாரிய தேர்வு, கடுமையான 5 சுற்றுக்களை கொண்டது. 5 சுற்றுக்களிலும் தேர்ச்சி பெற்றால்தான், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள¢ பயிற்சி மையத்தில் சேர முடியும்.

4 சுற்று தேர்வுகளில் தேறிய சுவாதி, இறுதியாக, கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்ற நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றார். நேற்று அவருக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. அதிலும் தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இன்னும் ஓராண்டுக்கு அங்கு அவர் பயிற்சி பெறுவார். அடுத்த ஆண்டு அவர் ராணுவத்தில் அதிகாரியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News