செய்திகள்

வெற்றி உறுதியான பிறகே ஜெயலலிதாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்: இல.கணேசன் பேட்டி

Published On 2016-06-07 10:50 IST   |   Update On 2016-06-07 10:50:00 IST
சட்டசபை தேர்தல் முடிவின்போது வெற்றி உறுதியான பிறகே ஜெயலலிதாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார் என்று வேலூரில் இல.கணேசன் பேட்டியளித்துள்ளார்.
வேலூர்:

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் தோல்வி குறித்த ஆய்வு செய்வதற்காக நிர்வாகிகளின் ஆய்வுகூட்டம் நேற்று மாலை வேலூரில் நடந்தது. இதில் பா.ஜ.க. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தலில் நடந்த சாதகம் மற்றும் பாதகம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களிடத்திலும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கோவை அருகே தேர்தல் நேரத்தில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்த விஷயத்தில் மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருக்கிறார். வங்கி அதிகாரிகள் அதற்கான காரணம் குறித்து தெரிவித்து விட்டதால் இளங்கோவன் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்மீது அவதூறு வழக்கு தொடர மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லியை கேட்டுக்கொள்வோம்.

சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி உறுதியாகிவிட்ட பிறகே பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் மேற்குவங்காளம், கேரளா ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி தேர்தலை ஒத்திவைக்கப்பட்டுள்ளது மட்டும் போதாது. பணம் கொடுத்த இரு கட்சி வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும். இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும். கட்சி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அந்த கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எதிர்காலத்தில் நிரந்தர சீர்திருத்தம் தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News