அம்பத்தூரில் பழ வியாபாரி வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை
வில்லிவாக்கம்:
அம்பத்தூரை அடுத்த புதூர் சீனிவாச நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். பழ மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு வியாபாரத்தில் வசூலான ரூ. 2½ லட்சம் பணத்தை பீரோவில் வைத்து தூங்கினார். நள்ளிரவு பலத்த மழை பெய்ததால் வீட்டில் புழுக்கமாக இருந்தது. இதனால் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.
அப்போது மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து பீரோ அருகே இருந்த சாவியை எடுத்து அதை திறந்து ரூ.2½ லட்சம் பணத்தை கொள்ளையடித்தான்.
மேலும் 5 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டான். காலையில் எழுந்த மணிகண்டன் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அம்பத்தூர் புதூரை அடுத்த திருமலைபிரியா நகரை சேர்ந்தவர் கோபால். மின்வாரிய அதிகாரி. நேற்று இவரது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டிவிட்டு திருவொற்றியூருக்கு சென்று விட்டார்.
இன்று காலை 5 மணியளவில் 2 மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு மேல்மாடியில் வசிப்பவர்கள் கீழே வந்தனர். அவர்களை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். இதனால் வீட்டில் நகை-பணம் தப்பியது.