செய்திகள்

பொக்லின் எந்திரத்தில் இருந்து கீழே விழுந்து மின்வாரிய தொழிலாளி பலி

Published On 2016-06-07 21:39 IST   |   Update On 2016-06-07 21:39:00 IST
மேட்டுபாளையம் அருகே மின்கம்பங்களை கொண்டு சென்ற போது, பொக்லின் எந்திரத்தில் இருந்து கீழே விழுந்து மின்வாரிய தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
வடவள்ளி:

மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 29). இவர் வடவள்ளி அருகே உள்ள சோமைய பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வடவள்ளி அனுசியா கார்டன் பகுதியில் புதிதாக 7 சிமெண்டு மின் கம்பங்களை நடுவதற்கு பொக்ளைன் எந்திரத்தில் ஆனந்தகுமார் சென்றார்.

பொக்லின் எந்திரத்தில் முன்பக்கத்தில் ஆனந்தகுமார் அமர்ந்து கொண்டு மின்கம்பங்களை பிடித்தப்படி வந்தார். வண்டியை டிரைவர் பிரபாகரன் (26) ஓட்டி வந்தார்.

அப்போது கஸ்தூரி நாயக்கன்பாளையம் என்ற இடத்தில் வந்த போது வேகத் தடையை கவனிக்காமல் பொக்லின் எந்திரம் வேகமாக சென்றது.

இதில் எந்திரத்தில் முன்னால் இருந்த ஆனந்த குமார் திடீரென தலைக்குப்புற கீழே விழுந்தார். இதில் எதிர்பாராத விதமாக பொக்லின் முன்பக்க சக்கரம் ஆனந்தகுமார் தலை மீது ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் பலியானார். இந்த விபத்து பற்றி வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான ஆனந்த குமாருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

இதேபோல், கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). இவர் பார்சல் லாரியில் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலாளியாக வேளை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி பகுதியில் பார்சல் லாரியில் பொருட்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது லாரியை டிரைவர் பின்னோக்கி எடுத்தார். இதில் எதிர்பாராத விதமாக சுந்தரம் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News