செய்திகள்

கூடங்குளம் 2-வது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும்: வளாக இயக்குனர் சுந்தர் தகவல்

Published On 2016-07-23 04:25 IST   |   Update On 2016-07-23 04:25:00 IST
கூடங்குளம் அணு மின்நிலைய 2-வது அணு உலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறினார்.
வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திதிறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டன. முதல் அணு உலையில் 2013-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, 2014-ம் ஆண்டில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்பட்டது.

பராமரிப்பு பணி, சிறு கோளாறுகள் சரி செய்யப்பட்டு முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி வர்த்தகரீதியாக நடைபெற்று வருகிறது.

2-வது அணு உலையில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வந்தன. அணு உலை நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்திய, ரஷிய விஞ்ஞானிகள் 2-வது அணு உலையில் கடந்த 8-ந் தேதி அணுப்பிளவு சோதனையை தொடங்கினர். 10-ந் தேதி இரவு அணுப்பிளவு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த அணுப்பிளவு மூலம் வெப்பம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்உற்பத்தியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மின்நிலைய வளாக இயக்குனர் சுந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் அணு உலையில் கடந்த 150 நாட்களாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி வெற்றிகரமாக நடந்து வருகிறது. இது மிகப்பெரிய சாதனை. 2-வது அணு உலையில் அணுப்பிளவு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மின்சார உற்பத்திக்கு வெப்பம் அதிகரிக்கும் பணியும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இது தொடர்பான அறிக்கை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆணையம் ஆய்வு செய்து இந்த அணு உலையில் டர்பனை இயக்கி மின்சார உற்பத்தி செய்ய ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் அந்த அனுமதி கிடைத்து விடும்.

2-வது அணு உலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) மின்சார உற்பத்தி தொடங்கப்படும். அதன் பிறகு படிப்படியாக மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்படும். மீண்டும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று வர்த்தகரீதியான மின் உற்பத்தி நடைபெறும்.

அணு மின்நிலைய வளாகத்தில் 3-வது மற்றும் 4-வது அணுஉலைகள் அமைப்பதற்கான வானம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த அணு உலைகளுக்கான கான்கிரீட் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News