குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெய்ய தொடங்கியது. சுமார் 10 நாட்கள் இடைவிடாது கொட்டிய கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.
அதன்பிறகு வெயில் அடித்துவந்த நிலையில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தது. பேச்சிப்பாறை அணைப்பகுதியில் நேற்று இரவு சாரல்மழை பெய்தது.
நாகர்கோவில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. 9.30 மணியளவில் திடீரென வானத்தில் கருமேங்கள் திரண்டு மழை பெய்தது. சுமார் 10 நிமிடம் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.
குலசேகரம், மார்த்தாண்டம், கீரிப்பாறை, அருமனை பகுதிகளிலும் லேசான சாரல்மழை பெய்தது. திற்பரப்பு அருவிப்பகுதியி லும் லேசான மழை தூறியது. அருவியில் தண்ணீர் மிதமான அளவு கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 403 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 88 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 447 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.