கரூர் மாவட்ட மணல் குவாரிகளில் முற்றுகை போராட்டம்: பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் அறிக்கை
கரூர்:
பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் பி. கோபிநாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் வாங்கல், கடம்பங்குறிச்சி, அச்சமாபுரம், மாயனூர், மருதூர் என 6-க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக மணல் அள்ளப்படுகிறது. பெரும்பாலும் இந்த மணல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஆழத்தில் மணல் அள்ளப்படுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதால பாதாளத்திற்கு சென்று விட்டது.
ஏற்கனவே காவிரியில் தண்ணீர் கேட்டு நாம் போராடும் இன்றைய நிலையில் ஒரு சிலரின் ஆதாயத்திற்காக இயற்கை வளம் முற்றிலும் பாழ்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இந்த நிலையில் வேலாயுதம்பாளையம் அருகே தவிட்டுப்பாளைத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி குவாரி அமைக்க அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்கு உரியது.
இங்கு குவாரி அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். எனவே தவிட்டுப்பாளையத்தில் புதிய குவாரி அமைக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாசன நீரேற்று சங்கங்களை ஒருங்கிணைத்து திருச்சி கோட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஒவ்வொரு மணல் குவாரியிலும் தொடர் முற்றுக்கை போராட்டம் நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் எடை மெஷின் அமைத்து லாரிகளில் ஏற்றிச்செல்லும் மணல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோபிநாத் கூறியுள்ளார்.