செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2016-11-21 16:06 IST   |   Update On 2016-11-21 16:06:00 IST
பட்டுக்கோட்டை அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (55). விவசாயி.

இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். ஒரு ஏக்கருக்கு 12 மூட்டை நெல் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் பம்பு செட்டுடன் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது.

தீபாவளியன்று மாசிலாமணிக்கு சிறு விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாற்று நடப்பட்ட விவசாய நிலத்தை அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. இதனால் நாற்றுகள் கருகியது.

இதனை நிலத்தின் உரிமையாளர் செல்வராஜ் பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மாசிலாமணியின் உறவினர் பாண்டியனும் கண்டித்துள்ளார். இதனால் மாசிலாமணி மனவேதனை அடைந்தார். அவர் பூச்சி கொல்லி மாத்திரையை தின்று விட்டார். மயங்கி விழுந்த அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட மாசிலாமணிக்கு பத்மாவதி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இதுவரை 10 விவசாயிகள் பயிர் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News