செய்திகள்

ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முயன்ற போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

Published On 2016-11-21 16:17 IST   |   Update On 2016-11-21 16:17:00 IST
கமி‌ஷனுக்காக ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற முயன்ற போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சோளிங்கர்:

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டர்கள் கொடுக்கும் வசூல் பணத்தை வங்கியில் கட்டும்போது சில்லரை பணத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து செலுத்துவதாக புகார்கள் வந்தது. இதை கண்காணிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது கடந்த 18-ந் தேதி சோளிங்கர் பணிமனையில் கண்டக்டர்கள் கட்டிய பணம் வங்கியில் செலுத்தப்பட்டது தெரிய வந்தது. பணிமனையில் இருந்து பணத்தை வங்கிக்கு கொண்டுசென்றபோது அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இல்லை.

ஆனால் வங்கியில் பணம் கட்டும்போது வங்கி செலானில் ரூபாய் நோட்டுகள் பற்றிய விவரத்தில் (டெனாமினேசன்) ரூ.47 ஆயிரம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.47 ஆயிரம் சில்லரை நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு பதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியது தெரியவந்தது.

இதுபற்றி விசாரித்தபோது சோளிங்கர் பணிமனை கண்காணிப்பாளர் ஜோஸ்வா எழுத்தர் ராஜாராம் ஆகியோர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து போக்குவரத்துக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

கண்காணிப்பாளர் ஜோஸ்வா, எழுத்தர் ராஜாராம் ஆகியோர் மாற்றிய ரூ.47 ஆயிரம் அவர்களுடைய பணமா அல்லது வெளியில் இருந்து யாரும் கொடுத்து அதை மாற்றினார்களா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News