செய்திகள்
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் மறியல்
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் காலி குடங்களுடன் மறியல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே அடியனூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட ரெட்டியப்பட்டி, வேடப்பட்டி, நல்லாம் பட்டி, குள்ளனம்பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஆழ்துளைகிணறு மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த நீர்மட்டம் குறைந்து போனதால் இதுபோன்ற பிரச்சினை நீடிக்கிறது. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல முறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தும் எந்தவிதபதிலும் இல்லை. எனவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர்.
பின்னர் நத்தம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அனுப்பி வைத்தனர்.