செய்திகள்

பூண்டி ஏரிக்கு 2 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது

Published On 2017-02-19 16:01 IST   |   Update On 2017-02-19 16:01:00 IST
கடந்த ஒரு மாதத்தில் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதியில் இருந்து 2 டி.எம்.சி. நீர் வந்தது.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததையடுத்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலில் 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து 1800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

.இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு இன்று காலை 491 கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 24.94 அடியாக பதிவானது. 837 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த 21-ந் தேதி முதல் இன்று காலை வரை 30 நாட்களில் பூண்டி ஏரிக்கு 1.91 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் 320 கனஅடியும், சென்னை மெட்ரோ வாட்டர் போர்ட்டுக்கு பேபி கால்வாயில் 10 கனஅடியும் தண்ணீர் திறநந்து விடப்படுகிறது.

Similar News