செய்திகள்
திருவள்ளூரில் வங்கியில் தீ விபத்து
திருவள்ளூரில் தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ஜவகர்லால் நேரு சாலையில் 3 மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது. இதில் தரை தளத்தில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் இன்று காலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து வங்கியின் மின்சார ‘மெயின் போர்டை’ சரி செய்தனர்.
உடனே மின்சாரம் வந்தது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மின்சார மெயின் போர்டு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் வங்கியில் இருந்த பணம், நகை ஆவணங்கள் தப்பியது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.