செய்திகள்

இமாச்சல பிரதேச சாலை விபத்தில் தமிழர்கள் பலி: முதலமைச்சர் இரங்கல்

Published On 2017-05-15 15:06 IST   |   Update On 2017-05-15 15:06:00 IST
இமாச்சல பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு மற்றும் தெற்கு வட்டங்களுக்குரிய பகுதியான அண்ணாநகர் மற்றும் தெப்பக்குளத்தினைச் சேர்ந்த 16 நபர்கள் இமாச்சல பிரதேசம், குளூ மணாலிக்கு சுற்றுலா சென்ற போது, குளூ மணாலிக்கு செல்லும் வழியில் பிலாஸ்பூர் என்ற இடத்தில் 14.5.2017 அன்று விபத்துக்குள்ளாகியதில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி காயத்ரி,  சிவசாமி என்பவரின் மகன் ஜெயராமன் மற்றும் நல்லதம்பி என்பவரின் மகன் குமார் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்துள்ளேன்.



எனது உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடல்களை உடனடியாக மதுரைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும், அவர்களை தங்க வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்கிறேன். இந்த விபத்தில் பதிமூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு நல்ல முறையில் உயர் சிகிச்சை அளிக்கும் படி நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

Similar News