செய்திகள்

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அரசின் உத்தரவு தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது- கனிமொழி

Published On 2017-05-31 10:08 IST   |   Update On 2017-05-31 10:08:00 IST
இறைச்சிக்காக மாடுகளை கொல்ல தடை விதித்த மத்திய அரசின் உத்தரவு, தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
பழனி:

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உணவு என்பது தனிமனிதனின் விருப்பம், அதில் அரசு தலையிடுவது தவறு. அது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. அதனால் தான் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.

பல மாநில முதல்வர்கள் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்துள்ளனர். தி.மு.கவும் இதை எதிர்க்கிறது. உணவு என்பது தனி மனிதனின் அடிப்படை உரிமை. மத்திய அரசாங்கமோ, ஒரு மாநில அரசாங்கமோ இதில் தலையிட்டு உரிமைகளை பறித்து கொள்வது என்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.


இப்பிரச்சனை மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டதாகும். இப்பிரச்சனையை தி.மு.க எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. தமிழக அரசு எதிலுமே எந்த நிலைப்பாடும் எடுத்துக்கொள்ளாத நிலையில் இதில் என்ன நிலைப்பாடு அவர்கள் எடுக்கப்போகிறார்கள்? அவர்களது ஆட்சியை காப்பாற்றி கொள்வது மட்டுமே அவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது.

தி.மு.க தலைவரின் வைர விழா பத்திரிக்கையில் எனது பெயர் இல்லை என்பது ஒரு வி‌ஷயம் அல்ல. நான் ஒன்றும் தேசிய தலைவர் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் சக்கரபாணி எம்.எல்.ஏ. ,செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News