தஞ்சை அருகே நாட்டு வெடி வெடித்து 2 பேர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்தவர் கணபதி. இவர் தஞ்சை அருகே உள்ள ராராமுத்திரக்கோட்டையில் நாட்டு வெடி வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு பகுதியில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கணபதி திருமானூரில் இருந்து வெடிகளை வாங்கி வந்து இருந்தார். அதனை தென் கொண்டார் இருப்பு பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து இருந்தார்.
அதனை பிரிக்கும் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது திடீரென நாட்டு வெடி வெடித்தது.
இதில் சென்னையை சேர்ந்த நாகராஜன் (33), ராராமுத்திரக்கோட்டையை சேர்ந்த பிச்சையன் (70) ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். தென்கொண்டார் இருப்பை சேர்ந்த முத்தமிழ் செல்வன் (40) காயம் அடைந்தார். அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடி விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாபாநாசம், தஞ்சை, கும்பகோணம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பலியான 2 தொழிலாளியின் உடல்களும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வெடி விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணபதி தென் கொண்டார் இருப்பு பகுதியில் ஒரு குடோனில் நாட்டு வெடி தயாரித்து வந்தார். சமீபத்தில் அங்கு சோதனை நடத்தப்பட்டதால் மறைமுகமாக தோட்டத்தில் வைத்து வெடி தயாரித்துள்ளார்.
சட்ட விரோதமாக அவர் வெடி தயாரித்த போது தான் விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் பலியாகி விட்டனர்.
இந்த சம்பவம் ராராமுத்திரக் கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.