செய்திகள்

கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

Published On 2017-08-19 09:10 IST   |   Update On 2017-08-19 09:10:00 IST
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லிக்குன்னு புதூர்வயல் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சில காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அவை அதே பகுதியை சேர்ந்த துரை என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. அப்போது திடீரென அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் பாக்கு தோட்டத்துக்குள் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் பயங்கரமாக பிளிறின. இந்த சத்தம் நேற்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தது. ஆனால் யானைகள் மீதான அச்சத்தால் மக்கள் யாரும் அங்கு செல்லவில்லை. பின்னர் காலையில் யானைகள் அனைத்தும் வனப்பகுதிக்குள் சென்றன.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பாக்கு தோட்டத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 யானைகள் இறந்து கிடந்தன. அவற்றின் அருகே சுமார் 3 வயதுடைய குட்டி யானை ஒன்று கண்ணீருடன் தனது துதிக்கையால் இறந்து கிடந்த யானைகளின் மீது தடவியவாறு நின்றுக்கொண்டிருந்தது.

அந்த 2 யானைகளும் மின்சாரம் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. தோட்டத்தில் புகுந்த யானைகள் பாக்கு மரங்களை அசைத்ததால், அருகே உள்ள மின்கம்பிகள் மீது ஒரு பாக்கு மரம் விழுந்துள்ளது. இதில் ஒரு மின்கம்பி அறுந்து அங்கிருந்த இரும்பு கம்பியில் விழுந்து, அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை தொட்டதால் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியானதாக தெரிகிறது.

யானைகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அங்கு நின்றிருந்த குட்டி யானை அவர்களை துரத்தியது. இதனால் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்கள் உதவியுடனும் குட்டி யானையை வனத்துறையினர் விரட்டினர்.

பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் விஜயராகவன், அரசு கால்நடை டாக்டர் பிரபு ஆகியோர் வரவழைக்கப்பட்டு யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி யானைகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இறந்த ஆண் யானைக்கு சுமார் 15 வயதும், பெண் யானைக்கு 18 வயதும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News