செய்திகள்

வேப்பம்பட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2017-11-01 15:39 IST   |   Update On 2017-11-01 15:39:00 IST
வேப்பம்பட்டில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அதிகாரிகள் இடித்ததால், பெண் தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செவ்வாய்ப்பேட்டை:

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பூங்கோதை (வயது50). அப்பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு வீடுகட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி இருந்தனர்.

இது தொடர்பாக பூங்கோதை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க மாவட்ட கலெக்டருக்கு சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்கப் போவதாக லோகசந்திரன், நடராஜன், தியாகி உள்ளிட்ட 4 பேருக்கு ஏற்கனவே முன் அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் முரளி, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் வீடுகளை இடித்து தள்ளினார்கள்.

அப்போது லோக சந்திரனின் சகோதரி லீலாவதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வேப்பம்பட்டு-புதுச்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News