செய்திகள்

ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கு: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-02-06 10:28 IST   |   Update On 2018-02-06 10:28:00 IST
நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக்மோசடி வழக்குத் தொடர்ந்தார். அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, போத்ரா ஆஜராகாததால், வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ரஜினிகாந்த் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு விசாரணையில், மனுதாரர் முகுந்த்சந்த் போத்ரா ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவர் அதிகாரம் அளித்துள்ள முகவர் ஆஜராகியுள்ளார். அவ்வாறு ஆஜராக அந்த முகவருக்கு அடிப்படை உரிமை இல்லை.

மனுதாரர் தொடர்ந்து ஆஜராகாததால், அவர் தொடர்ந்த வழக்கை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தொடர்ந்து ஏன் ஆஜராகவில்லை? என்பதற்கு மனுதாரர் இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை.

எனக்கு எதிராக கீழ் கோர்ட்டில் மனுதாரர் தொடர்ந்து அவதூறு வழக்கு சரியான காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்த விதமான அவதூறு வார்த்தைகளை நான் பயன்படுத்தினேன் என்பதற்கு ஆதாரமான ஆவணங்களை மனுதாரர் உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே ஐகோர்ட்டில் தாக்கல் செய்யாமல் உள்ளார். இந்த காரணங்களுக்காக இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வி. முரளிதரன், ‘மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரரின் புகார் மனுவை, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 203-ன்படி மீண்டும் விசாரணை நடத்தி, தகுந்த உத்தரவை 8 வாரத்துக்குள் ஜார்ஜ் டவுன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பிறப்பிக்க வேண்டும். ஒருவேளை மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை மாஜிஸ்திரேட்டு ஏற்றுக்கொண்டால், அந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கிறேன். தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜரானால் போதுமானது ஆகும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.  #tamilnews

Similar News