செய்திகள்

அரியலூர்: தோழியுடன் சென்ற கல்லூரி மாணவி காரில் கடத்தல்

Published On 2018-02-06 19:04 IST   |   Update On 2018-02-06 19:04:00 IST
அரியலூரில் கல்லூரி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 18). இவர் அரியலூர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றிரவு ஜெயலட்சுமியும், அவரது தோழி கார்த்திகாவும் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக கொல்லாபுரத்தில் இருந்து அரியலூருக்கு மொபட்டில் சென்றனர். அப்போது வழியில் டாடா சுமோ காரில் வந்த ஒரு கும்பல் திடீரென ஜெயலட்சுமியின் மொபட்டை வழிமறித்த தோடு, அவரை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகா ஊருக்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்கள் அரியலூருக்கு விரைந்து சென்று மகளை கடத்தி சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை.

இதையடுத்து அரியலூர் போலீசில் புகார் செய்தனர். அதில், கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (26), பாஸ்கர் (25) மற்றும் 5 பேர் சேர்ந்து ஜெயலட்சுமியை கடத்தி சென்றுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர். இதற்காக அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜெயலட்சுமி எதற்காக கடத்தப்பட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் அவரை கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக கடத்தி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் கும்பல் பிடிபட்டால்தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரியவரும்.

கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News