செய்திகள்
மாமாலியின் கணவர் அலோக் மாலிக். பலியான மாமாலி.

தெங்கம்புதூர் அருகே வடமாநில கர்ப்பிணி பெண் மர்மமரணம்

Published On 2018-03-01 17:18 IST   |   Update On 2018-03-01 17:18:00 IST
குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே வடமாநில கர்ப்பிணியான இளம்பெண் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஜி.ஓ. காலனி:

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அலோக் மாலிக். இவர் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியில் தங்கியிருந்து அருகில் உள்ள தனியார் வலைக்கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது மனைவி மாமாலி (வயது 18) என்பவருடன் கலைஞர் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று பகல் 11.30 மணிக்கு அலோக் மாலிக் மனைவி மாமாலியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். மாமாலிக்கு உடல் நலம் சரியில்லை, அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி அவர் கூறினார்.

மாமாலியை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மாமாலி சாவில் மர்மம் இருப்பதை அறிந்த தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி கோபிகா, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. வேணுகோபால், சப்-இன்ஸ்பெக்டர் லைசா ஆகியோர் அலோக் மாலிக்கை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாமாலி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை நான் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன் என முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாமாலிக்கை அக்கம்பக்கத்தினரிடம் பேசக்கூடாது என அலோக் மாலிக் கூறி வந்தார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் மாமாலி அருகில் வசிப்பவர்களிடம் பேசி உள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் தான் நேற்று மாமாலி மர்மமான முறையில் இறந்துள்ளார். மாமாலி உண்மையிலேயே தற்கொலை செய்தாரா? அல்லது அலோக் மாலிக் தாக்கியதில் அவர் இறந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த மாமாலி கர்ப்பிணியாக இருந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். #Tamilnews

Similar News