கருப்பாயூரணியில் வாலிபர் அடித்துக்கொலை? - போலீசார் விசாரணை
மதுரை:
மதுரை வேளாண்மை கல்லூரி அருகே உள்ள மலையாளத்தான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் மலைச் சாமி (வயது21). இவர் கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவில் உள்ள சாயப்பட்டறையில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று மலைச் சாமி ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தாய் மாலதிக்கு தகவல் கிடைத்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சாயப்பட்டறைக்கு சென்றார்.
அங்கு காயங்களுடன் மலைச்சாமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனை ஆம்புலன்சு மூலம் அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அவரது நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலைச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாலதி கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைச்சாமியை தாக்கியது யார்? எதற்காக தாக்கப்பட்டார்? கொலை செய்யும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.