செய்திகள்

விழுப்புரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை

Published On 2018-06-09 15:13 IST   |   Update On 2018-06-09 15:13:00 IST
விழுப்புரத்தில் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது47).

இவர் கப்பியாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

ரஜினி நடித்து வெளியான காலா திரைபடத்தை பார்ப்பதற்காக கோபால் நேற்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோ இருந்த அறைக்கு சென்றனர்.

பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

படம் பார்த்து விட்டு கோபால் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

பின்னர் இது குறித்து கோபால் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கபட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை .

மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது:

நாங்கள் வசித்து வரும் விவேகானந்தா நகர் பகுதியில் கடந்த 1 வருடமாகவே அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் நாங்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகிறோம்.

எனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம மனிதர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள நகரில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News