செய்திகள்

பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

Published On 2018-07-11 18:02 GMT   |   Update On 2018-07-11 18:02 GMT
பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.

இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்காமல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்தனர்.

இந்த திடீர் தடை உத்தரவால் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக பகுதியிலேயே நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்துறை அதிகாரிகளின் தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், 2-வது நாளாக 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News