செய்திகள்

கஜா புயலில் இருந்து முத்துபேட்டையை காப்பாற்றிய மாங்குரோவ் காடுகள்

Published On 2018-12-03 10:37 IST   |   Update On 2018-12-03 10:37:00 IST
கஜா புயலில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி மட்டும் குறைந்த பாதிப்புடன் தப்பியதற்கு அந்த பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. #MangroveForest #GajaCyclone
சென்னை:

கஜா புயலினால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி மட்டும் குறைந்த பாதிப்புடன் தப்பியுள்ளது. இதற்கு அந்த பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு மாங்குரோவ் காடுகள் உள்ளன. 6 வகையான மாங்குரோவ் மரங்கள் இந்த காடுகளில் வளர்கின்றன. இவை சிறு மரம் போல அடர்த்தியாக வளர்ந்து காட்சியளிக்கும்.

இதனால் அதை தாண்டி கடல் அலையோ, காற்றோ வரவிடாமல் தடுக்கும். பொதுவாக கடல் அலை மற்றும் கடலில் இருந்து வீசும் காற்றை தடுக்கக்கூடிய ஆற்றலுடன் அலையாத்தி காடுகள் திகழ்கின்றன.

அந்த காடுகளில் வளரும் தாவரங்களில் மாங்குரோவ் மரங்கள் மிக முக்கியமானவையாகும். முத்துப்பேட்டையில் இவ்வாறு அமைந்திருந்த மாங்குரோவ் காடுகள் கஜா புயலின் தாக்கத்தை கடுமையாக குறைத்திருப்பதாக மாவட்ட வனத்துறை அதிகாரி அறிவொளி கூறினார்.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மாங்குரோவ் காடுகள் தடுப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2004 சுனாமி தாக்குதலின்போது கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியில் மாங்குரோவ் காடுகள் பாதிப்பை தடுத்ததாவும் அறிவொளி கூறினார்.



திருவாரூர் மாவட்டத்தில் மாங்குரோவ் காடுகள் அல்லா பகுதியில் மாமரங்களும், தென்னை மரங்களும் மற்ற வகை மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஆனால் மாங்குரோவ் காடு அமைந்திருந்த முத்துப்பேட்டை பகுதியில் மரங்களில் மேல் பகுதி மட்டும் சேதமடைந்து இருந்தது. மரங்கள் வேரோடு சாய்வது தடுக்கப்பட்டிருந்தது.

அதாவது தரையில் இருந்து 5 மீட்டர் உயரத்திற்கு காற்று வீசுவதை மாங்குரோவ் காடுகள் தடுத்து இருந்தன. இதன் காரணமாக தரை பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் பொருட்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் மாங்குரோவ் காடுகளில் வசித்த பறவை, விலங்கு போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. அவை புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்து உயிரிழந்துள்ளன.

அவற்றை பரிசோதனை செய்ததில் பல உயிரினங்கள் தரையில் தலைமோதி தான் இறந்திருந்தன. பல பறவைகள் முன்கூட்டியே அந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டன. அவை தப்பியதாகவும் வனத்துறை அதிகாரி அறிவொளி கூறினார். #MangroveForest #GajaCyclone
Tags:    

Similar News