செய்திகள்
விழுப்புரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது- கணவன்-மனைவி உயிர் தப்பினர்
விழுப்புரம் அருகே இன்று காலை கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விழுப்புரம்:
சேலம் மாவட்டம் மகேந்திரபுரியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 52). வியாபாரி. இவரது மனைவி புவனேஸ்வரி (45). இவர்கள் காஞ்சிபுரம் சென்று அங்கு நடைபெற்று வரும் அத்திவரதர் உற்வத்தை காண முடிவு செய்தனர்.
நேற்று மாலை பாஸ்கர், அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் காரில் காஞ்சிபுரம் சென்றனர். காரை பாஸ்கர் ஓட்டி சென்றார். இரவில் அவர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதரை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினர். இன்று காலை அவர்கள் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். காலை 10 மணி அளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் ஓவியர் நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த காரின் முன்பகுதியில் திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் அந்த காரை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து அவரும், அவரது மனைவி புவனேஸ்வரியும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர். பின்னர் காரில் எரிந்த தீயை அவர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி ஒரே புகைமூட்டமாக மாறியது.
உடனே இது குறித்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜெயசங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காரின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக பாஸ்கரும், அவரது மனைவி புவனேஸ்வரியும் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.