செய்திகள்
குழந்தை மீட்பு

ரூ.25 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - புரோக்கரிடம் போலீசார் விசாரணை

Published On 2019-07-18 12:08 IST   |   Update On 2019-07-18 12:08:00 IST
கிருஷ்ணகிரி அருகே ரூ. 25 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார் புரோக்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(38), பெயிண்டர். இவரது மனைவி முத்துலட்சுமி (32).

முத்துலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதேபோல் குமரேசனுக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

குமரேசன், முத்துலட்சுமி சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு 14 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஆண் குழந்தையை ரூ. 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்து உள்ளனர்.

இது குறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி மற்றும் குழந்தைகள் நலக்குழும அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் வள்ளுவர்புரம் கிராமத்திற்கு சென்று முத்துலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது ஆண் குழந்தையை ரூ. 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ், சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் மகாராஜகடை போலீசார் ஆந்திரா மாநிலம் குப்பம் சென்று, குழந்தையை வாங்கியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த ஆண் குழந்தை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பாக உள்ளது தெரியவந்தது.

அதன்படி குழந்தை பெல்லாரியில் இருந்து அழைத்து வரப்பட்டு குப்பம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த குழந்தையை இன்று கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்க உள்ளனர்.

குழந்தையை கிருஷ்ணன் என்ற புரோக்கர் மூலம் விற்றது தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News