கடையாலுமூடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
நாகர்கோவில்:
திருவட்டார் அருகே செங்கோடி மார்த்தார் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் விஜுவ் (வயது 27). ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். இவர், கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று விஜுவ், தனது நண்பர்கள் வினோத், விபினுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டினார்.
கடையாலு மூடு அருகே அரக்கநாடு பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். விஜுவ்வுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி விஜுவ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடையாலு மூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் நாகர்கோவில் சகோதரர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 24). இவர், நேற்று அதிகாலை இந்துக் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆனந்த் மீது மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஈத்தாமொழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இவரும் விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரவிச்சந்திரன் மீது போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.