செய்திகள்
சிறுமி ராஜஸ்ரீ

அம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்

Published On 2019-10-22 12:43 IST   |   Update On 2019-10-22 14:58:00 IST
அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன் செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி:

அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது 2-வது மகள் ராஜஸ்ரீ (வயது 10). இவருக்கு நீண்ட நாட்களாக  இரண்டு காதிலும் காது குத்திய துளையில் கட்டி இருந்தது.

இதை சரி செய்ய அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றனர். நேற்று முன்தினம் சிறுமி ராஜஸ்ரீக்கு காதில் ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

டாக்டர்களின் மருத்துவ குறிப்பில் காது அறுவை சிகிச்சை எனவும், அவர்கள் கொடுத்துள்ள மருத்துவ கையேட்டில் காது அறுவை சிகிச்சை எனவும் பதிவிடப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் ஆபரேசன் முடிந்து சிறுமி வெளியே வந்த போது அவரது தொண்டையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அறிந்ததும் சிறுமியின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

சிறுமி ராஜஸ்ரீக்கு ஆபரேசன் செய்த அதே நாளில் மற்றொரு சிறுவனுக்கு தொண்டையில் ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்து இருந்தனர். குழப்பத்தில் சிறுமிக்கு மாற்றி ஆபரேசன் செய்ததாக தெரிகிறது. மேலும் சிறுமியும் தொண்டையில் உள்ள பிரச்சனை காரணமாக அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

Similar News