பூந்தமல்லி அருகே பஸ் மோதி காவலாளி பலி- பொதுமக்கள் சாலை மறியல்
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (40). தனியார் கம்பெனி காவலாளி. நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடந்தார்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இங்கு சிக்னல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர மறியலுக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.