மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
- மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினியை நினைத்து பெருமை கொள்கிறேன்
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். அவர்களின் கூட்டுமுயற்சியும், விடாமுயற்சியும்தான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
வரலாற்றுச் சாதனை புரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினியை நினைத்து பெருமை கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.