தமிழ்நாடு

வெற்றி நிச்சயம்.. த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா வீடியோவை வெளியிட்ட விஜய்

Published On 2025-02-02 15:36 IST   |   Update On 2025-02-02 15:36:00 IST
  • த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
  • த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டாத அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை த.வெ.க. தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலையை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்தார். மேலும், சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.

மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வெற்றி நிச்சயம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News