ஈசிஆர் சம்பவம்: வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? - அமைச்சர் ரகுபதி
- ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்.
- திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள்
சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்து, அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இசிஆர் கார் சம்பவத்தில் கைதான சந்துருவின் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "நான் எந்தக்கட்சியையும் சேராதவன். உறவினர்கள் மட்டுமே அதிமுகவில் இருக்கின்றனர். சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்கவே திமுக கொடியை காரில் பொருத்தினோம். மற்றபடி தங்களுக்கும் கட்சிக்கும் தொடர்பே இல்லை" என்று சந்துரு விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், சந்துருவின் வாக்குமூல வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?" என்று பதிவிட்டுள்ளார்.