தமிழ்நாடு

2026-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்காக தி.மு.க. அதிரடியாக களம் இறங்கியது

Published On 2025-02-02 13:56 IST   |   Update On 2025-02-02 13:56:00 IST
  • ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

ஆளும் கட்சியான திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்து தி.மு.க. தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களை மீண்டும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு தலைமை தாங்குபவராக ஒருவர் இருப்பார். அவருக்கு கீழே 10 பேர் செயல்படுவார்கள்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வீடுகளை கணக்கெடுத்து அந்த வீடுகளில் வசித்து வரும் ஆயிரம் வாக்காளர்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு குழுவினரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி இந்த 11 பேர் கொண்ட குழு தீவிரமாக களமிறங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று வாக்களிப்பவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மீண்டும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்.

தமிழக அரசின் சாதனைகள் தொடர்வதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி நீடிப்பதற்கும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்பது போன்ற பிரசாரங்களை இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.

இதே போன்று தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகளின் கூட்டத்தை போட்டு அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இளைஞர் அணியில் உள்ள இளம் வயது உடைய வாலிபர்கள் தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களையும் பெண்கள், முதியவர்களையும் கவரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தி.மு.க. இளைஞர் அணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி 2026-ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற கணக்கை போட்டு தி.மு.க. நிர்வாகிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள்.

இதன் மூலம் தி.மு.க. நிர்வாகிகள் முன்கூட்டியே சுறுசுறுப்புடன் தேர்தல் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News