உள்ளூர் செய்திகள்

மதுரை அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை-2 பேர் கைது

Published On 2025-02-02 13:27 IST   |   Update On 2025-02-02 13:27:00 IST
  • இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
  • கழுத்தை அறுத்து உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33).

இந்நிலையில் முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். அதை திருப்பி கொடுத்த நிலையில் ரூ.1000 மட்டும் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனிடையே கடந்த 25-ந் தேதி ராஜசேகரும், அவரது நண்பருமான அணைக்கரைப் பட்டியை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபனும் டி.கல்லுப்பட்டி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தனது நண்பர்கள் சரவணன், பூமர் சரவணன், சங்கர் ஆகியோருடன் வந்த மணி ராஜசேகர் மற்றும் பென்னி என்ற பார்த்திபனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் மற்றும் சிலர் முருகேசனின் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டுள்ளனர். தலையை டி.கல்லுப்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள மதுக்கடையில் வைத்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்தவர்கள் முருகேசனின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முருகேசன் கொலை தொடர்பாக ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் இன்று கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News