திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற இந்து அமைப்பினர் திண்டுக்கல்லில் அதிரடி கைது
- பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
- தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல்:
இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கந்தன் மலையை காப்பாற்றக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தனர் . இதில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் 100 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் குமரன் திருநகரில் உள்ள மாநில தொண்டரணி தலைவர் மோகன் என்பவரை நகர் வடக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அதேபோல் வேடசந்தூரில் அகில இந்திய இந்து மகா சபா தேசிய துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகி சரவண பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோரையும் வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் பகுதியில் வ.உ.சி. மக்கள் இயக்கம் மற்றும் ஒக்கலிக்கர் இளைஞர் பேரவையின் சார்பாக திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
இந்த போஸ்டரை வேடசந்தூர் பகுதியில் ஒட்டுவதற்காக ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 30), அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) ஆகியோர் ஒட்டியுள்ளனர்.
2 பேர் மீதும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து, வ.உ.சி. மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் முருகேசன், ஒக்கலிகர் இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் கூடினர்.
போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.