தமிழ்நாடு

ஒருவேளை இருக்குமோ.. மதுரை மாவட்ட த.வெ.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெற்றிமாறன்

Published On 2025-02-02 18:01 IST   |   Update On 2025-02-02 18:01:00 IST
  • த.வெ.க.வின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
  • த.வெ.க. சார்பில் மதுரை மாவட்டத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டாத அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை த.வெ.க. தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலையை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்தார். மேலும், சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே த.வெ.க.வின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.

அவ்வகையில், மதுரை மாவட்டத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதே சமயம் த.வெ.க. நிகழ்ச்சியில் தான் வெற்றிமாறன் கலந்துகொண்டார் என்றும் அக்கட்சியில் அவர் இணையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'விடுதலை 2' படத்தில் இடம் பெற்றிருந்த 'கொள்கை இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள்' என்ற வசனம் விஜயை குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News