பாஜக பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு போடாதீர்கள் - கெஜ்ரிவால்
- பாஜகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஓட்டுக்காக ரூ. 3,000 கொடுப்பதாக கூறுகின்றனர்.
- பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை குடியிருப்புகளை இடித்து அகற்றுவார்கள்.
டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவினர் சேரிகளில் வசிப்பவர்களுக்கு ஓட்டுக்கு ரூ.3000 கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய கெஜ்ரிவால், "இன்று, சேரியில் இருந்து எனக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. பாஜக கட்சியினர் வீடு வீடாகச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் ரூ. 3,000 கொடுப்பதாகவும் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையாயம் செய்து கொடுக்கும் என்றும் என்று தெரிவித்ததாக அவர்கள் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
அவர்கள் விரிக்கும் வலையில் நீங்கள் விழுந்து விட வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தால், அவர்கள் உங்கள் மீது வழக்குப் போட்டு கைது செய்வார்கள்
அவர்கள் உங்களுக்கு இலவசமாக பணம் தருகிறார்கள் என்றால், அதை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை குடியிருப்புகளை இடித்து அகற்றுவார்கள். மும்பையில், ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவியை தங்கள் நண்பர் ஒருவருக்கு அவர்கள் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.