8 வயது சிறுமியை தீ வைத்து எரித்து கோணிச் சாக்கில் மூட்டை கட்டி மரப்பெட்டிக்குள் ஒளித்த சித்தி
- போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- போலீசார் அவரை கைது செய்தனர்
பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தனது எட்டு வயது வளர்ப்பு மகளை சித்தி கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்குப்பையில் மறைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் தும்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயா போஜ்பூர் பகுதியில் உள்ள வீட்டில் மரப்பெட்டிக்குள் இருந்த கோணி சாக்கில் சிறுமியின் எரிந்த உடல் எச்சங்களை நேற்று [சனிக்கிழமை] இரவு போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
நேற்று காலை முதலே சிறுமியை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக பேட்டியளித்த பக்சார் காவல் கண்காணிப்பாளர் சுபம் ஆர்யா, முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் சித்தி குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டார். தனது வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை தீ வைத்து கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், உடலை கோணி பையில் அடைத்து, மரப்பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
அவரின் வாக்குமூலம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றத்தை செய்ததற்கான காரணத்தை அவர் போலீசாரிடம் கூறவில்லை. சிறுமியின் தந்தை டெல்லியில் வேலை செய்து வருகிறார். சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.