VIDEO: அயோத்தியில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. கண்ணீர் விட்டு அழுத சமாஜ்வாதி எம்.பி.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கா விட்டால் என்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்.
- பகவான் ராமர், அன்னை சீதா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 22 வயது தலித் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கண்ணீர் விட்டு அழுதபடி பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ஜனவரி 31 அன்று மாலையில் காணாமல் போன தலித் பெண் அடுத்த நாள் ஒரு வாய்க்கால் அருகே உடலில் துணியின்றி சடலமாக மீட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்தவரின் இரத்தக் கறை படிந்த ஆடைகளும் மீட்கப்பட்டன.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத், "என்னை டெல்லிக்கு செல்ல விடுங்கள். இதை நான் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கா விட்டால் என்னுடைய எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்வேன். பகவான் ராமர், அன்னை சீதா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என்று அழுதபடியே கூறினார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. துக்கம் தாளாமல் அழுது கொண்டிருக்க மற்ற தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயலும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.