செய்திகள்
பத்திரப்பதிவு

26 நாட்களுக்கு பிறகு திறப்பு- வேலூர் மண்டலத்தில் 116 பத்திரங்கள் பதிவு

Published On 2020-04-21 13:28 IST   |   Update On 2020-04-21 13:28:00 IST
26 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் வேலூர் மண்டலத்தில் 24 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 116 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் நேற்று முதல் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கின. வேலூர் வேலப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகமும், வேலூர் மண்டல துணை இயக்குனர் அலுவலகமும் இயங்கி வருகிறது.

துணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய கோட்டங்களில் உள்ள 44 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. சுமார் 26 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகள் கொரோனா தொற்று காரணமாக 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே ஆம்பூரை சேர்ந்தவர்கள் பள்ளிகொண்டாவிலும், வாணியம்பாடியை சேர்ந்தவர்கள் நாட்டறம்பள்ளியிலும், திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் ஜோலார்பேட்டையிலும் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரக்கோணம், ஆற்காடு, நெமிலி, பெரணமல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்பட 17 பத்திரப்பதிவு அலுவலகங்களில் யாரும் பதிவு செய்ய வரவில்லை. அவற்றை தவிர 24 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 116 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News