செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் குணமடைந்தனர்

Published On 2020-04-21 13:44 IST   |   Update On 2020-04-21 13:44:00 IST
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 21 பேரும் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் 22 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேர் என மொத்தம் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதில் 65 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இதேபோல் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். 10-க்கும் மேற்பட்டோர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சிகிச்சை பெற்று வரும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரை சேர்ந்த 3 பேர், வாணியம்பாடி, திருப்பத்தூரை தலா ஒருவர் வீதம் 5 பேர் இன்று குணமடைந்தனர். குணமடைந்த 21 பேரையும் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் 28 நாட்கள் முடிவடைந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 700 பேர் முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 630 பேர் 28 நாட்களை கடந்த விடுவிக்கப்பட்டனர். 70 பேர் மட்டுமே தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 760 பேர் தனிமைப்படுத்தபட்டனர். இதில் 615 பேர் விடுவிக்கப்பட்டு தற்போது 145 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மொத்தம் 3 மாவட்டங்களிலும் 2045 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News