செய்திகள்
ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறிய 2,400 துரித பரிசோதனை கருவிகள் - அமைச்சர் ஆய்வு

Published On 2020-04-21 18:43 IST   |   Update On 2020-04-21 18:43:00 IST
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பதை கண்டறிய 2 ஆயிரத்து 400 துரித பரிசோதனை கருவிகள் வந்தது. இதை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பல்வேறு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக ஆய்வு செய்தார். துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள் பாதுகாப்புடன் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர்அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்தை காக்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தாலுகா அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்துக்கு 2,400 துரித பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) வந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள் மற்றும் நோய் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் இந்த துரித பரிசோதனை கருவிகள் மூலமாக சோதனை செய்யப்படும்.

இதன் மூலமாக விரைவாக சோதனை முடிவு கிடைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படும். ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ள துரித பரிசோதனை கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்தில் 10 பேருக்கு பரிசோதனை மேற்கொள்வதை அமைச்சர் ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த கருவிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் கவிதா, ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது, பாலசுப்பிரமணியன் (ஊராட்சிகள்), திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் வள்ளி, பொது சுகாதார பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News