செய்திகள்
பருத்தி

பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள்

Published On 2020-06-08 18:05 IST   |   Update On 2020-06-08 18:05:00 IST
குறுவைப் பருவத்தில் பருத்தி காப்பீடு செய்ய பதிவு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.480 செலுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசுவரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் குறுவைப் பட்டத்தில் காப்பீடு பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டாரங்களை சேர்ந்த உளுந்து, நிலக்கடலை மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் காப்பீடு பதிவு செய்ய தகுதியானவர்கள். பயிர்கடன் பெறும் மற்றும் பயிர்கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

குறுவைப் பருவத்தில் பருத்தி காப்பீடு செய்ய பதிவுகட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.480 செலுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய பதிவுக்கட்டணம் 1 ஏக்கருக்கு ரூ.331 செலுத்தி ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு பதிவுகட்டணமாக ரூ.416 செலுத்தவேண்டும். உரிய காலக்கெடுவுக்குள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தி பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்கள் அறிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News