செய்திகள்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ்

சேலம் மாவட்டத்தில் 50 சதவீத தனியார் பஸ்கள் ஓடின

Published On 2020-06-11 19:05 IST   |   Update On 2020-06-11 19:05:00 IST
சேலம் மாவட்டத்தில் 50 சதவீத தனியார் பஸ்கள் ஓடின. ஒவ்வொரு பஸ்சிலும் அதிகபட்சம் 30 பயணிகள் வரை மட்டுமே ஏற்றப்படுகின்றனர்.
சேலம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பஸ், ரெயில், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கில் கடந்த வாரம் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 60 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குள் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறைந்தளவு பயணிகளுடன் பஸ் இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் என கருதி தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நேற்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின. மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் உள்ள நிலையில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர், ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, ஏற்காடு அடிவாரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

ஒவ்வொரு பஸ்சிலும் அதிகபட்சம் 30 பயணிகள் வரை மட்டுமே ஏற்றப்படுகின்றனர். பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளுக்கும் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்தனர். மேலும் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையங்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. 

Similar News