செய்திகள்
கலெக்டர் சந்தீப்நந்தூரி

சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைக்க 70 சதவீதம் மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

Published On 2020-07-20 19:49 IST   |   Update On 2020-07-20 19:49:00 IST
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி:

மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 60 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 30 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் ரூ.57 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும் மற்றும் தமிழக அரசின் 40 சதவீத மானியத்துடனும் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். இந்த திட்டத்தில் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

5 குதிரை திறன் கொண்ட ஏ.சி. மற்றும் 5 குதிரை திறன் கொண்ட டி.சி. சூரிய சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 947 மற்றும் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 303 ஆகும். இதில் விவசாயிகளின் 30 சதவீத பங்களிப்பு முறையே ரூ.71 ஆயிரத்து 384 மற்றும் ரூ.72 ஆயிரத்து 691 ஆகும். 7.5 குதிரைதிறன் கொண்ட ஏசி. மற்றும் டி.சி சூரிய சக்தியால் இயங்கும் நீர் மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்து 899 மற்றும் ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 569 ஆகும். இதில் விவசாயிகளின் 30 சதவீத பங்களிப்பு முறையே ரூ.95 ஆயிரமும், ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 871 ஆகும்.

10 குதிரை திறன் கொண்ட ஏ.சி. மற்றும் டி.சி. சூரிய சக்தியால் இயக்கும் நீர்மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்காக மொத்த விலை முறையே ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 669 மற்றும் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 629 ஆகும். இதில் விவசாயிகளின் பங்களிப்பு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 301 மற்றும் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 889 ஆகும். மொத்த விலை என்பது நிறுவுதல் செலவு, வரிகள், 5 ஆண்டுகால பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியது.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, தூத்துக்குடி என்ற முகவரிக்கும் அல்லது 9443694245 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

அதே போல் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, எட்டயபுரம் ரோடு பிரதான சாலை, கோவில்பட்டி என்ற முகவரிக்கும் அல்லது 9442049591 என்ற எண்ணிற்கும், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, திருச்செந்தூர் என்ற முகவரிக்கும் அல்லது 9443157710 என்ற எண்ணிற்கும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தையோ அல்லது 6374350057 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News