செய்திகள்
மனித கழிவை மாணவரை அள்ள வைத்த சம்பவம் - இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மனித கழிவை மாணவரை அள்ள வைத்த சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தர்மபுரி:
பென்னாகரம் அருகே பள்ளி மாணவர் ஒருவரை மனித கழிவை அள்ள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஜெயராமன், மண்டல செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் சிவாஜி, மனித உரிமை அமைப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஞ்சப்பன் கண்டனம் தெரிவித்து பேசினார். அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, இண்டூர், நல்லம்பள்ளி ஆகிய இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவரை மனித கழிவை அள்ள வைத்து தாக்கிய விவகாரம் தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்திய போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வன்கொடுமையில் ஈடுபட்டவர் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வன்கொடுமை இனிமேல் எங்கும் நடக்காமல் இருப்பதை கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமையகத்தை ஆபாசமாக சித்தரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாதையன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் முருகன், ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.